இலங் கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் இன்று 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று காலை தனது சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திருமாவளவன். பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் மத்திய அரசு புறம் தள்ளி விட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள். பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்று கூறினால் மேனனை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் ராஜபக்சே. இப்படிப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் தமிழர்களின் உயிர் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலும் இந்திய அரசு பெருத்த மெளனம் காப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் திருமாவளவன்.