அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். 66.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டு பிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். இதனால் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணரான அந்தோனி பாசி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம். என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது..