சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.
பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.
இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன்,
நீதியரசர் விக்னேஸ்வரன் தான் கடமை ஆற்றிய நீதிமன்றங்களில் கூண்டில் ஏறி சாட்சி சொல்வதை தவிர்ப்பது தமிழ் சட்ட சமூகத்தின் மாண்பை காப்பாற்றுவதற்கு அவசியம். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி – அதுவும் ஒரு சட்டத்தரணி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக வாபஸ் பெற வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும் எனக் குறிப்பிட்டார்.