வடக்கு போர் நிலவரத்தால் மாகாணசபைத் தேர்தல் களையிழப்பு. மக்கள் அக்கறைப்படவில்லை; பவ்ரல்

paffre.jpgமத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் மக்களுக்கு அக்கறை இல்லையெனத் தெரிவித்த பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ வடபோர்முனை நிலவரத்தால் தேர்தல் களையிழந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சமூக, சமய மத்திய நிலையத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 937 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 50 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதேவேளை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களாக 56 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு நிலையான கண்காணிப்பாளர் வீதம் 2,600 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், தேர்தல் தொகுதி ஒன்றிற்கு இரு வாகனங்கள் வீதம் 40 தேர்தல் தொகுதிகளிலும் 80 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களில் 400 கண்காணிப்பாளர்கள் தேர்தல் தினத்தன்று தமது சேவையை வழங்கவுள்ளனர்.

அத்துடன், இத்தேர்தல் கண்காணிப்பிலும் சர்வோதயம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் பலவும் எம்முடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் பொருட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியுடனும் நாம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஐ.தே.க.வுடன் நடைபெற்ற பேச்சுகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய கட்சிகளுடனான பேச்சுகளும் நடத்தப்படவுள்ளது. இதேபோல் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்துடனும் நாம் பேச்சுகளில் ஈடுபடவுள்ளோம்.

தேர்தல் கண்காணிப்பு குறித்த நடைமுறைகளை விளக்குவதற்காக பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் பாரதூரமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இடம்பெறவில்லை. ஆனாலும், இரு மாகாணங்களிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனினும், அவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வேட்பு மனுத்தாக்கல் செய்தது முதல் இதுவரை தேர்தல் உஷார் நிலை அடைந்ததை அவதானிக்க முடியவில்லை. வடக்கில் நடைபெறும் படை நகர்வுகள் மீது சகலரும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையே இவ்வாறான உற்சாகமற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகும். இதேவேளை, இந்தத் தேர்தல் அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், மக்களுக்கு இத்தேர்தலில் அக்கறை இல்லை. மக்கள் தேர்தலை நடத்துமாறு கேட்கவில்லை அரசியல்வாதிகளிற்காகவே இத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கருத்துகளை உள்வாங்கியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *