“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. இது இறுதி யோசனையும் இல்லை.” இவ்வாறு அமைச்சரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சில விடயங்களை விரைவாக தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். உதாரணத்துக்கு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கலாமா என்பதற்குத் தீர்வைக் காணவேண்டியுள்ளது.
அரசமைப்பு மாற்றத்துக்கான நடைமுறையின் ஆரம்பமாகவே நாங்கள் 20ஆவது திருத்தத்தைக் கருதுகின்றோம்.
தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் அரசமைப்பில்குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும்.
20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. அமைச்சரவையின் அனுமதியுடன் 20ஆவது திருத்தத்தை முன்வைத்தது அரசே. அமைச்சர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்கின்றோம்.
20ஆவது திருத்த வரைவு இறுதி யோசனையில்லை. இதனை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளோமே தவிர நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை” – என்றார்.