“ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.

போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுகள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

நிர்மாணப் பணிகளுக்கு தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வீதி நிர்மாணப் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதும் ஒப்பந்தக்கார்கள் இருதரப்பினர்களினாலும் நடைபெற வேண்டும்.

உப ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *