”விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும்” – ஜனாதிபதி கோட்டாபாய

ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (16.09.2020) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலை பல்வேறு இடங்களில் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி அமைச்ர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னணி விளையாட்டு வீரர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *