இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சர்வதேச சமூகம்மிச்சேல் பல்லெட் கருத்து குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், அவருடைய அந்தக் குறுகிய அறிக்கையில் அவரால் விளக்கப்பட்டிருந்ததை விடவும் அதிகளவில் கவலைகொள்ளத் தக்கதாகவே ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளின் நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான கவனம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறித்து சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்தவேண்டும்.
போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் மிச்சேல் பச்லெட் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையின் பிரகாரம், 2009 போரில் முக்கிய பங்கை வகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் தற்போதைய பாதுகாப்புச்செயலாளர் மேஜர் ஜெனர் கமால் குணரத்னவும் மேற்படி முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களில் அடங்குகிறார்.
அத்துடன்,இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் தொடர்பாகவும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்ட சுட்டிக்காட்டியிருக்கிறது.
அத்தோடு ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரணதண்டனைக் கைதி எனும் அதேவேளை, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டமை வியப்பிற்குரியதாகும்.
மேலும், தற்போது அனைத்து அதிகாரங்களும் தனியொரு குடும்பத்தின் கைகளுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதும் வெகுவாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதொன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.