கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று 59 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரியொருவர் கூறினார். வவுனியா தேக்கங்காடு களஞ்சியத்திலிருந்து ஓமந்தை வரை இராணுவப் பாதுகாப்புடன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் வழித்துணையுடன் இந்த லொறிகள் புதுக்குடியிருப்பு களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென வவுனியா மாவட்ட செயலாளர் கூறினார். இதற்கிடையில், வன்னியிலிருந்து வந்து பாதை மூடப்பட்டதனால் திரும்பி செல்ல முடியாது கடந்த ஒரு வார காலம் வவுனியாவில் தரித்து நின்ற சுமார் 300 பொது மக்களும் நேற்று நெடுங்கேணி வரை பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.