”புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா, பிள்ளையான் குற்றமற்றவர்கள் தியாகி திலீபன்தான் இவர்கள் பார்வைக்கு குற்றவாளி” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘ அமரர் வன்னியசிங்கத்தின் 61ஆவது நினைவு தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (17.09.2020) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
“ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் அமைப்புகளினாலும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களே இந்த நாட்டை ஆளுகின்றார்கள்.
அவ்வாறான கட்டமைப்புக்குள்தான் நாம் வாழ வேண்டிய நிலைக்குள் இருக்கின்றோம். எமது மக்களின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபனை நினைவேந்துவதற்கு இந்த அரசு பொலிஸார் ஊடாக நீதிமன்றத் தடையைப் பெற்றுள்ளது. இந்தத் தடையால் கண்ணீர்விட்டு அழுவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் நோயினால் இறந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்.
மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை இவர்கள் இப்படித்தான் கூறுவார்கள். இந்த நாட்டில் முதலில் ஆயுதம் எடுத்துப் போராடிய ஜே.வி.பியில் இருந்தவர்கள் தற்போது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். இதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறிப்பாக கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் உள்ளனர். அவர்கள் இன்று குற்றமற்றவர்களாம்.
20ஆவது திருத்தத்தின் மூலம் இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் வேளையில் எங்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள்.
நீதிமன்றத் தடைகள் மூலம் நீதியை எதிர்பாக்கும் எங்களுக்கு நீதியும் இல்லை; கண்ணீர் விட்டு அழுவதற்கும் எங்களுக்கு வழியும் இல்லாத நிலையில் வாழுகின்றோம்.
அமரர் வன்னியசிங்கம் ஒற்றுமையாக இருந்து மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். அவர் வழியில் நாமும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.