படையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.
ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்