”13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது.
அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர்.
மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. மாகாணசபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு, மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணங்களாக பிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.