எம்.ரி.வி. ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

ranil-2912.jpgஎம்.ரி.வி. ஊடகவியலாளர் செவோன் டானியலை கைது செய்ய பொலிஸார் முயற்சித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு அதிகாரியின் பேட்டியை மையமாக வைத்து ஒரு நபரைக் கைது செய்ய முயற்சிப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையெனவும் சுட்டிக்காட்டினார். ஊடக சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லையென ஊடகநிறுவனங்களின் தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்து நான்கு மணிநேரம் கடப்பதற்குள் ஊடகங்கள்மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.                     

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகமான கேம்பிரிட்ஜ் ரெரஸில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

சிரச, எம்.ரி.வி.தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளரான செவோன் டானியலை பொலிஸார் வியாழக்கிழமை விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்று தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் செவோன் டானியல் பொலிஸாரின் கண்களுக்குப்படாமல் தற்போது மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளரின் பேட்டியை வைத்து செவோன் டானியலை விசாரணைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இத்தகவல் வெளியானதையடுத்து ஜனாதிபதி செவோன் டானியலை கைது செய்யவோ விசாரணைக்குட்படுத்தவோ அவசியமில்லை என அறிவித்திருக்கின்றார். ஆனால், பொலிஸார் அதுபற்றி செவோனுக்கோ, அவரது ஊடக நிறுவனத்துக்கோ, குடும்பத்தினருக்கோ இதுவரையில் அறிவிக்கவில்லை. இதனால், அச்சம் கொண்ட நிலையில் செவோன் டானியல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றார். ஜனாதிபதியின் உத்தரவுக்குக் கூட பொலிஸார் அடிபணியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

சிரச, எம்.ரி.வி.நிறுவனத்தை புலிகளின் குரல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எவ்வாறு அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது எனக்கேட்க விரும்புகின்றேன். சிரச நிறுவனம் தீ வைக்கப்பட்ட பின்னர் பொலிஸ் மா அதிபரும், ஊடக அமைச்சர்களிருவரும் அந்த இடத்துக்குச் சென்று செவோன் டானியலுடன் நிலைமைகளை கலந்துரையாடிய போது எதுவும் கூறாமலிருந்து விட்டு இப்போது செவோனை புலியெனக் கூறமுட்பட்டுள்ளனர். ஊடகங்கங்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் ஊடகங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்க முற்பட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். இன்று தம்மை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது ஆளும் தரப்பினர் புலி முத்திரை குத்தும் ஒரு புதுக் கலாசாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

புதுவருடம் பிறந்தகையோடு ஊடக அடக்குமுறைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிரச தீ வைப்பையடுத்து லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது செவோனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. பொலிஸ் தரப்பினர் சட்டத்தை தமது காலடியில் போட்டு மிதித்துச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தொலைக்காட்சிப் பேட்டியொன்றை மையமாக வைத்து ஒரு நபரை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி எதிர்காலம் குறித்து ஊடகத்துறையினர் பெரும் சந்தேகமும், அச்சமும் கொண்டுள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்த தாமதமின்றி அனைத்துச் சக்திகளும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க இங்கு வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *