தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை இடைநிறுத்துவதாக கடந்த 5ஆம் திகதி அறிவித்த அந்தக் கட்சியின் தலைவர், அதுதொடர்பில் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
“கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிக்க மணிவண்ணனுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தனது பக்க நியாயங்களை கட்சிக்கு அறிவிக்கவேண்டும். அதன்பின்னர் கட்சியால் அவர் மீது முன்வைக்கப்படும் 6 குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களிடம் தெரிவி்த்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது ஒழுக்காற்று விசாரணையை நடத்தும் முன் அனுபவமும் கட்சிசாராத சுயாதீன அதிகாரியாக உள்ள குறைந்தது மூவர் கொண்ட குழு முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அத்தோடு தன் மீதான ஒழுக்காற்று விசாரணை பொது மக்கள், ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக இடம்பெறவேண்டும் என்றும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.