இலங்கைக்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இன்று சனிக்கிழமை கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதேசமயம், நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விடயங்களுடன் வடக்கு போர் நிலவரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா பிரிவு) ஆகிய கட்சி பிரமுகர்களுடன் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேசமயம், நேற்று இரவு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் மேனன் சந்திக்கவிருந்தார்.
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, வன்னிப்போர் நிலpவரம் குறித்து அறிந்து கொள்வதில் மேனன் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மக்கள் வெளியேற்றம் குறித்தும் வெளியேறும் மக்கள் கூறுவது என்ன என்பது பற்றியும் அறிந்துகொள்வதில் மேனன் அதிகம் கரிசனை காட்டியதாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் தெரிவித்தனர் சிவ்சங்கர் மேனனின் வருகை வழமையான இராஜதந்திர தொடர்பாடலின் ஓரங்கம் என்று கூறப்பட்டாலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறும் இலங்கை மோதலை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்குமாறும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி உட்பட தமிழக கட்சிகள் பல வலியுறுத்தி வருவதன் பின்னணியாகவே மேனனின் வருகை அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வறிருக்க எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஜே.வி.பி. மேனனின் வருகையில் “உள்நோக்கம்’ இருப்பதாக சாடியுள்ளது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றதான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசாங்கம் செல்ல வேண்டுமென்ற அழுத்தத்தை சிவ்சங்கர் மேனன் கொடுக்கக் கூடுமென ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரட்நாயக்க கூறியுள்ளார்
msri
மேனனின் வருகையை- இருநாடுகளுக்கிடையிலான உச்சகட்ட உறவு என்கின்றது அரசு! போர்நிறுத்தம் பற்றி கதைக்கப்படவில்லை என்கின்றார் சித்தாத்தன்! பேச்சுவார்த்தையில் பூரண திருப்தி என்கின்றார் சம்பந்தன்! மத்தியஅரசை நம்பலாம் என்கின்றார் கலைஞர்! கலைஞரை நம்பலாம் எனகின்றார் மருத்துவர் ராமதாசு! தமிழ்மக்கள் யாரை நம்புவது? எல்லாம் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்ததுபோல் உள்ளது!