கிழக்கை விட கிளிநொச்சியை மிக துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசு உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்த வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை. எனவே, இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இலங்கையில் நடப்பது பிரிவினை வாதம். காஸாவில் நடப்பது இன அழிப்பே. எனவே இரண்டும் வேறுபட்டது என்றும் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லையென மலேசிய வீடமைப்பு அமைச்சர் செய்யித் ஹமீட் அஸ்வர் மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் உலகம் நன்கு தெரிந்துகொண்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. கிழக்கிலும் பார்க்க கிளிநொச்சி அரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். அதற்கான சந்தர்ப்பம் படையினர் ஈட்டிய வெற்றியின் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டு இவ்விடயத்தைப் பாராட்டியதுடன் இந்திய நிவாரண உதவிப் பொருட்களை சரியாக விநியோகிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றிக்குப் பின்னர் அரசாங்கம் படிப்படியாக வெற்றியை ஈட்டிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சியினர் தமது அரசியல் லாபம் கருதி அரசு மீது பொய்க் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.