பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,899 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,94,257 ஆக உயர்ந்தது. சாவு எண்ணிக்கையும் 41,777 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் இங்கிலாந்து தவறான திசையில் செல்வதாகவும், அங்கு அடுத்த மாதத்துக்குள் 50 ஆயிரம் புதிய பாதிப்பை பார்க்க முடியும் என நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வல்லன்சுடன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒப்பீட்டளவில் என்றாலும் சமீபத்தில் நாம் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இது தொடர்ந்தால் கொரோனா பலியும், பாதிப்பும் அதிக வேகத்தில் பல மடங்கு உயரக்கூடும். மற்ற நாடுகளில் பார்க்கும் பாதிப்பு தற்போது இங்கிலாந்திலும் இருக்கிறது’ என்று கூறினார்.
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தலைமை மருத்துவ அதிகாரியின் இந்த எச்சரிக்கை அரசுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.