வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக அமையவில்லையென்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே கிழக்கில் அரசியல் செய்ய முடியுமென்ற சூழலே அங்கு நிலவுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி., இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை சிவ்சங்கர் மேனனை சந்தித்துப் பேசிய போதே இந்த விடயங்கள் பற்றி அவரிடம் எடுத்துரைத்ததாக ரவூப் ஹக்கீம் கூறினார். இந்தச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவுத் துறை செயலாளரிடம் எடுத்துரைத்த விடயங்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட ஹக்கீம் எம்.பி;
வடக்கு, கிழக்கில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மீட்கப்பட்டும் கூட அங்கு மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அங்கு ஓரளவேனும் அரசியல் செய்ய முடியுமென்ற சூழல் நிலவுகிறது. நாட்டின் இனப்பிரச்சினை பாரதூரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக தங்களது தலைமைகளை தெரிந்தெடுப்பதற்கான புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை புறந்தள்ளி அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்கியாளும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மையின மக்கள் மத்தியில் யுத்தத்தை மாத்திரம் தீர்வாக அனுமதிக்க முடியாது.
பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்படும் அதேநேரம், அதற்கு சமாந்தரமாக அரசியல் தீர்வும் முன்வைக்கப்படுமென அரசாங்கம் கூறியது. எனினும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அதனது 100 கூட்டங்களையும் கடந்து விட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்வு யோசனை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது அதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்க ஏதுவாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை பயன்படுத்திவந்தது. எனினும் அதில் தற்போது 95 சதவீத இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன. முக்கிய கட்சிகள் அதில் அங்கம் பெறாத போதிலும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் அரசியல் தீர்வு பற்றிக் கூறிவந்த விடயங்களில் நம்பிக்கை கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்தது. எனினும் அந்த நம்பிக்கையை நாம் தற்போது இழந்துள்ளோம்.
எனவே, அரசியல் தீர்விற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகி நிற்கிறது. அரசாங்கம் பெற்ற யுத்த வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள அரசியல் தீர்வு அவசியம். பிரிந்த வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு திருப்திகரமான தீர்வாக அமையவில்லை. பிரிந்த கிழக்கில் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். எனவே, வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு போதிய அதிகாரங்களுடைய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இந்த விடயங்களே சந்திப்பின் போது சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டப்பட்டன என்று கூறினார்.
Eravuran
ஹக்கீம் நீங்கள் வெளியில் இப்படிச் சொன்னாலும் உள்ளத்தில் இருப்பது வேறு ஒன்று என்பது அனைவரும் அறிந்த விடயம். கிழக்கு முதல் அமைச்சர் பதவி தங்களுக்கோ அல்லது தவிசாளர் பசீருக்கோ கிடைத்திருந்தால் உங்கள் கதை வசனம் இப்போது வேறாக இருந்திருக்கும். என்ன செய்ய? எல்லாம் முஸ்லிம் மக்களின் தலையெழுத்து. அதனால்தான் நீங்களெல்லாம் தலைவராகி நினைத்ததெல்லாம் பேச முடிகிறது.
அது சரி நீங்கள் “ஆயுதப் போராட்டத்திலிருந்து முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாத்தது மு.கா தான்” என பெருமையாகப் பேசியிருந்த தலைப்பின் மீது எனது பதிவினை வைத்திருந்தேன். பதிவும் இல்லை! தலைப்பும் இல்லை!! தேசத்துக்கெதிராக ஏதும் வக்கீல் நோட்டீசு அனுப்பி விட்டீர்களா?
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
“ஆயுதப் போராட்டத்திலிருந்து முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாத்தது மு.கா தான்”
http://thesamnet.co.uk/?p=6468