முதல்வர் கருணாநிதி அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு காண்பதற்கு 50 ஆண்டுக் காலமாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். கருணாநிதியை நம்புவோம். பலமுறை வாக்குறுதி அளித்து வந்துள்ள இந்திய பேரரசு மீது முதல்-அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்புவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிரச்சினையில் நாம் விரும்புகின்ற முடிவை மேற்கொள்வார் என்று முதல்வரை நாம் நம்புவோம்.
முதல்வர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும். அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.
எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நிலை குறித்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி புதிதாக அறிவித்திருக்கும் வாக்குறுதியையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கவலையையும் மனதில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.