இந்து சமயத்தை பாதுகாக்க ஆறு அம்சக்கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி !

இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (01.10.2020) ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலம் இன்று காலை 08.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று, அங்கிருந்து ரயில் நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றது.

அதன்பின்னர் அங்கிருந்து பசார் வீதியூடாக சென்று, சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் நிறைவுபெற்றது.

பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும், இந்துமதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து ஏனைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல், இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

அத்தோடு, வவுனியா மாவட்டத்திலே பல வீதிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றது என்றும், வேறு மதம் சார்ந்து வேறு பெயர் சார்ந்து தமக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன என்றும் அவற்றையெல்லாம் நீக்கி இந்துமதம் மற்றும் தமிழ் மொழி சார்ந்த, பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் கலந்துகொண்டதுடன், இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி பவனியும் இடம்பெற்றிருந்தது.

ஊர்வலத்தில் நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம், அகில இலங்கை இந்து சாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக் குருக்குள், வேலர் சுவாமிகள், முத்து ஜெயந்தி நாதக்குருக்கள், பிரபாகரக் குருக்கள், தமிழருவி சிவகுமாரன், உட்பட நூற்றுக்ணக்கான இந்து மதக்குருக்கள், ஆலயத்தொண்டர்கள், வர்ததகர்கள், பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *