மலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.
நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.