“குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்”  – பிரதமர் மகிந்தராஜபக்ஸ

“குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்”  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125ஆவது ஆண்டு விழா என்பவற்றை முன்னிட்டு தீவிர சிகிச்கை மற்றும் அறுவை சிகிச்சை நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய ஒன்பது மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் எலும்பு மாற்று சிகிச்கை மற்றும் புதிய அறுவை சிகிச்சை கட்டட திறப்புவிழா ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இருவரும் இணைந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினர்.

றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இணையத்தளத்தை இணையத்தில் வெளியிடல் மற்றும் டிஜிட்டல் மருத்துவ சிகிச்சை அமைப்பை நிறுவுதல் என்பனவும் பிரதமரின் கரங்களினால் முன்னெடுக்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய பிரதமர்,

´குழந்தைகள் தின கொண்டங்களை முன்னிட்டு சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ய கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று விசேட வைத்திய நிபுணர்கள் இணைந்து வைத்தியசாலையின் பணிப்பாளரதும், சக வைத்தியசாலை ஊழியர்களதும் பங்களிப்புடன் இரண்டு சத்திர சிகிச்சை நிலையங்களை திறக்க முந்தது. இதன் மூலம் பாரிய சேவை மேற்கொள்ளப்படுகின்றது என நான் நினைக்கின்றேன்.

இதுவரை இரண்டு சிறுவர் வைத்தியசாலைகளே காணப்படுகின்றன. அது இங்கும் கண்டியிலுமாகும். சிறுவர் வைத்தியசாலைகள் குறைந்தபட்சம் மாகாணத்திற்கு ஒன்றாவது உருவாக்கப்பட வேண்டும் என எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. எது எவ்வாறாயினும் இன்று குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் எமது நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எமது பொறுப்பாகும்.

பாடசாலைகளுக்கு எமது விசேட வைத்திய நிபுணர் பாதெணிய கஞ்சி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார். அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரு கோப்பை கஞ்சி போன்ற போசாக்கான பானமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் கல்வி அமைச்சருக்கு முன்மொழிவொன்றை முன்வைக்கிறோம். எமது ஆட்சிக்காலத்தில் நாம் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுவதற்கு தயாராக உள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கைகளை முறையாக பராமரித்து செல்வது தொடர்பில் நாம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இத்தருணத்தில் அவர்களின் சிறப்பான சேவையை நான் பாராட்டுகின்றேன். எதிர்கால தலைமுறையை பாதுகாக்கும் அற்புத பணியே உங்களால் ஆற்றப்பட்டு வருகின்றது´ என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *