“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? “ – அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கேள்வி .

“வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நீக்கப்பட்டால் தற்கொலை செய்ய விக்னேஸ்வரன் தயாரா? என்று அவரிடம் நான் சவால் விடுகின்றேன்“ என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

‘இலங்கை அரசு சார்பானவர்கள் மாகாண சபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாண சபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்தவரையில் முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு, கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும்’ என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகள் நீக்கப்பட வேண்டுமெனில் 9 மாகாண சபைகளும் நீக்கப்படும். விக்னேஸ்வரனுக்காக வடக்கு, கிழக்கைத் தவிர்த்து ஏனைய 7 மாகாண சபைகளையும் நீக்க முடியாது.வடக்கு, கிழக்கு மாகாண சபைகள்தான் மிகவும் ஆபத்தாக இருக்கின்றபடியால் மாகாண சபைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும், மாகாண சபைகள் முற்றாக நீக்கப்பட வேண்டுமா? அல்லது 9 மாகாண சபைகளையும் மீள இயங்க வைக்க வேண்டுமா? என்பதை புதிய அரசமைப்பில் ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்துக் கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை.

சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்க வேண்டும் என்று கூறுகின்ற விக்னேஸ்வரன், அதைமீறி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்க முடியாது என்றும் குறிப்பிடுகின்றார். சமஷ்டி கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நீக்குவது தற்கொலைக்குச் சமமாகும் என்று புதிய நகைச்சுவையை விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

அவரின் இந்தக் கருத்தின் விரிவாக்கம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கனவான ‘தமிழ் ஈழம்’ கிடைக்கும் வரைக்கும் வடக்கு, கிழக்கில் மாகாண சபைகளை நீக்க முடியாது என்பதேயாகும். விடுதலைப்புலிகள் போல் விக்னேஸ்வரனும் கனவு காண்கின்றார். அவரின் கனவு ஒருபோதும் நனவாகாது எனவும் குறிப்பிட்டுளளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *