தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழியென ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது.
அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பான பொது விவாதத்தில் ஏ.பி.சி தமிழ் ஒலி அமைப்பின் சார்பாக உரையாற்றிய கஜீவன் அய்யாதுரை “தமிழர்களுக்கு உரிய முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் சிறந்த வழி” என ஜெனீவா கூட்டத் தொடரில் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தொடரில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை உயர் ஆணையர் 31:1 தீர்மானத்தை நிறைவேற்றுதில் முன்னேற்றமில்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல், நீதி, உண்மை ஆகியவற்றை தேடுவதில் இலங்கை அரசு எவ்வித செயல்பாடுகளையும் செய்யவில்லை.
இன அழிப்பு குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், துன்புறுத்தல், போர் குற்றங்கள் போன்ற சில உலக குற்றங்களுக்கு மனித உரிமை உயர் ஆணையர் பரிந்துரைத்த உலக கட்டுப்பாட்டை உறுதி செய்யவேண்டும்.
மேலும், தங்களது உறவுகளுக்காக போராடிய தாய்மார்கள், சிலர் இறந்தும் விட்டனர். தற்போது நடைபெறுகின்ற தமிழின அழிப்பு பற்றி கலந்துரையாடல் நடத்த, 40:1 தீர்மானத்தின் முக்கிய குழுவையும் பிற உறுப்பினர்களையும் உடன்படிக்கை நாடுகளையும் அழைக்கின்றோம்.
2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனஅழிப்பு நினைவேந்தலையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும் திலீபன் நினைவு நாளையும் நினைவுகூற தடை விதித்தனர்.
அத்துடன், தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால், காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.