இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள் இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
90 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக ஆழமான, நெருக்கமான மற்றும் நல்லுறவு நீடித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்தை உறுதியோடும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வரும் அதே வேளையில் தமிழர் இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், வட பகுதிகளில் இருந்து வெளியேறும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து மேனனிடம் ஜனாதிபதி விளக்கியதாகவும் அதி்ல் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை மேனன் சந்தித்தபோது இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாதும் உடனிருந்தார். ராஜபக்சே கண்டியில் இருந்ததால் அவரை மேனன் ராணுவ ஹெலிகாப்டரில் கண்டிக்கு சென்று சந்தித்துள்ளார். இந் நிலையில் தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையம் சிவசங்கர மேனன் வந்தார். அவரை சந்திப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டெல்லி சென்று விட்டார்.
அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே நேரம் மேனன் நடத்திய பேச்சு குறித்து இந்தியாவின் சார்பிலும் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.