யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகலை வைத்தியசாலையில் இனம் காணப்பட்ட இரு நோயாளிகளும் தற்போது சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் மினுவங்கொட பிரதேசத்தில் பதிவான கொவிட் – 19 பரவல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 தொற்று மேலும் சமூகத்தில் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது திவுலப்பிட்டிய, வெயாங்கொட, மினுவாங்கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டுதல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
சன நெரிசல் அதிகளவில் காணப்படும் இடங்களை புறக்கணிக்க வேண்டியது மக்களின் சமூகப் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார். வெளியில் செல்லும் போதும், வரும் போதும் முகக் கவசங்களை அணிவது அவசியம் எனவும், தொடர்ச்சியாக கைகளை கழுவுவதனையும், முகத்தை தொடுவதிலிருந்தும் விலகியிருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நோய் பரவாமல் தடுக்கவும், முதியவர்களை பாதுகாக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.