வட மாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் தாம் விரும்பினால் 67வயதுக்குப் பின்னரும் சேவை புரிய விண்ணப்பிக்கலாம் என வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நிறுவனத் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார். வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகை தந்த செயலாளர் அன்று பி.ப. 2மணிக்கு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மகாநாட்டு மண்ட பத்தில் நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது நிறுவனத் தலைவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் பின்வருமாறு தெரிவித்தார்.
சேவையில் இருந்து இளைப்பாறிய வைத்தியர்களை மீளவும் 67 வயது வரை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தலாம் என்பது அரசு சுற்றறிக்கை. ஆனால் யாழ். மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் களின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு 67 வயதுக்குப் பின்னரும் இவர்களை ஒரு வருடகாலத்திற்கு சேவையாற்ற அனுமதிக்க முடியும். ஆனால் இக் காலப்பகுதியில் இவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படும்.