மருந்துகளை உற்பத்தி செய்யவென கொள்வனவு செய்யப்பட்ட 160 மில்லியன் ரூபா பெறுமதியான மூலப் பொருட்கள் அரச மருத்துகள் உற்பத்தி நிறுவனத்தில் உபயோகிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 4,000 கிலோ நிறையுள்ள மருந்து உற்பத்திக்கான இந்த மூலப் பொருட்கள் கடந்த வருடம் மே மாதம் இறக்குமதி செய்யப்பட்டபோதும், இவற்றை உரிய காலத்துக்குள் உற்பத்திக்கு பயன்படுத்தாமையால் இம்மூலப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதற்காக விநியோகிக்கப்படும் “எரித்ரோமைசீ’ மருந்தை உற்பத்தி செய்வதற்கே இம்மூலப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை மதிப்பீடு செய்யும் குழுவில் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து அதன் தலைவர் மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டமை காரணமாக இந்த மூலப் பொருட்கள் இறக்குமதி விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அச்சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுமார் 50 வகையான மருந்துகள் பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் உள்ளன எனவும் இவை வைத்தியசாலைகளுக்கும் ஒசுசல மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் தற்போதுள்ள சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழும் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.