“கொவிட் நோய் பரவலைத் தடுப்பதற்கான அரசினுடைய அறிவுரைகளை மக்கள்“ முறையாக பின்பற்றாதது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் சமூக மட்டத்தில் பரவுவதனையடுத்து சுகாதார நடைமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று முன்னர் விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் தடுப்பிற்காக அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவடைந்ததே நோய்த்தொற்று மீண்டும் பரவியதற்கான அடிப்படை காரணமாகும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொவிட் நோய்த் தடுப்புக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட செயற்பாடுகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றாமை பெரும் குறைபாடாக அமைந்து விட்டது என காவற்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் – அது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைகளை ஊடகங்களும் குறைத்துக்கொண்டுவிட்டிருந்தன.
கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.
தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு – கோவிட் பரவல் மேலும் நிகழ்வதனைத் தடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு – அனைத்து ஊடகங்களுக்கும், எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.