“நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜனநாயக சக்திகள் பலம் கொண்டதாக அமையவேண்டும்’ என வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எமது நாட்டில் அண்மைக்காலமாக ஜனநாயக முகமூடி அணிந்து கொண்ட சர்வாதிகாரமே தலைவிரித்தாடுவதாக விசனம் தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தையும் அடிப்படை மனித உரிமை மறுப்பு, ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளிலிருந்தும் நாட்டை பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து ஜனநாயக சக்திகளும் தம்மைப்பலப்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும்’ ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; “எம்மோடுள்ள மக்கள் நாம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம்” என்றே கேள்வியை எழுப்பி வருகின்றனர். எம்மோடு இணைந்துள்ளவர்களும் அடுத்த கட்டம் எவ்வாறுள்ளதாக இருக்கவேண்டுமென கேட்கின்றனர். எமது அடுத்த பணி ஜனநாயகத்தை பாதுகாத்து அரச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாகவே இருக்கவேண்டும். இந்தப்பணி அவ்வளவு இலகுவானதாக இருக்கமுடியாது. ஏனெனில் வன்முறை அரசியல் கலாசாரத்தை எவராலும் தனித்து நின்று போராடி வெல்லமுடியாது. எனவே நாம் முதலில் எமது சக்தியைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். ஜனநாயகசக்திகள் பலமடைந்தால் மட்டுமே அடக்குமுறைகளை தோற்கடிக்கும் வலிமையையும் பெறமுடியும்.
முதலில் எமது கட்சியைப் பலப்படுத்தவேண்டும். அடுத்து எம்மோடு இணையக்கூடிய ஜனநாயக சக்திகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் 2009 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் நாடளாவியரீதியில் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை மேலும் பலமடையச் செய்யும் பொறுப்பு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமே தங்கியுள்ளது. சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். மூன்று மாதங்களுக்கிடையில் இந்தப் பலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த மக்கள் சக்தியை கட்டியெழுப்பியதும் ஏனைய ஜனநாயக சக்திகளையும் அரவணைத்துக் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் திட்டத்தை மேற்கொள்ள விருக்கிறோம்.
அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரபோக்கு அடக்கு முறைகளுக்குப் பதிலடி கொடுக்கக்கூடிய மக்கள் சக்தியை அணி திரட்டுவதே எமது தற்போதைய பிரதான பணியாகும். வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம். அங்கு தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, உபதலைவர் ருக்மன் சேனாநாயக்கா ஆகியோரடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலான பொது வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா , விஜித அபேவர்தன ஆகியோருடன் சேர்ந்து ஏனைய ஜனநாயக சக்திகளை இணைத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் வெற்றிகளோடு நாட்டின் இறைமை, ஜனநாயகம் என்பவற்றை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.