முஸ்லிம் சமூகத்தின் சுயகௌரவத்திற்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கெலிஓயா கலுகமுனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றால் தாராளமாக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், சமூகத்தின் கௌரவம் பாதிக்கப்படும் போது எப்படி அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க முடியும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சுயகௌரவத்துடன் செயற்பட வேண்டியுள்ளதாலேயே அரசுடன் இணைந்து செயற்படமுடியவில்லை. அரசிலிருந்து வெளியேறியமையாலேயே தற்போது என்னால் முஸ்லிம் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து செல்ல முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி எமது சுயகௌரவத்தை மதித்து நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதனுடன் கூட்டுச்சேர தீர்மானித்தோம். இதனால் நன்மை கிடைக்கும் என்பதும் எமது நம்பிக்கை. மேலும், மாகாண சபைகளில் ஏற்கனவே இருந்த ஆசனங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு. மக்கள் வேட்பாளர்களை நன்கு எடை போட்டு சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.