கொரோனா மூன்றாம் பரவலுக்கு நடுவிலும் சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் தூதுக்குழு தொடர்பில் நாடளுமன்றத்தில் வலுத்த விவாதம்..!

இலங்கை வருகை தரும்  சீன தூதுக்குழு எந்தவித தனிமைப்படுத்தலுக்கும் உற்படுத்தப்படாது நாட்டிற்குள் வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியினர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது பெரிய விவாதமாக வளர்ந்து கொண்டே சென்றுள்ளது.

வெளிநாட்டு உடன்படிக்கைகள் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,  “சீன தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் கொரோனா பரவுகின்றது என கூறிக்கொண்டு நாட்டின் முதலீடுகள், சுற்றுலாத்துறை எதனையும் மேற்கொள்ளாது நாட்டினை முடக்கி வைத்துக்கொண்டு எவ்வளவு காலத்திற்கு இருக்க முடியும். அடுத்த ஆண்டில் வைரஸ் தடுப்பு ஊசி அறிமுகப்படுத்துவதாக கூறுகின்றனர், தற்செயலாக தடுப்பூசி கண்டறியப்படாது போனால் இவ்வாறே முடங்கிக்கொண்டு இருக்கவா? முடியும். எனவே இந்த விடயத்தில் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். இப்போது சீன தூதுவர்கள் வந்துள்ளனர், விரைவில் அமெரிக்க தூதுக்குழுவொன்றும் வரவுள்ளனர்” என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை தொடர்பாக எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “அப்படியென்றால் இவர்கள் ஏயார் பபிள்  முறைமையின் படி வரவழைக்கப்படுவதென்றால் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யாது, தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படாது வரவழைப்பது போன்ற முறைமை தானே அது” என அவர் கேள்வி எழுப்பிய போது அதற்கு  ”அப்படி அல்ல, குறித்த நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும், பின்னர் அவர்கள் சமூக இடைவெளிகளை பேணும் விதமாக வரவழைக்கப்பட்டு இங்கு அவர்கள் தங்குமிடங்களில் அதேபோன்று சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பதும், அப்படியே அவர்களை மீண்டும் அனுப்பி வைப்பதும் போன்ற ஒரு முறைமையாகும்” என்ற பதில் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்தும் கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா “ இவ்வாறு தனிமைப்படுத்தப்படாத நபர்களை ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துவிட்டார்களா” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “ அவ்வாறு வருபவர்கள் எம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், அவர்கள் சீனாவிலேயே பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்து வரவேண்டும். இலங்கைக்கு வந்த பின்னர் நாம் அவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை செய்வோம் என்பதாகும். ஆகவே இரண்டு நாடுகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்“ என பதிலளித்தார்.

தொடர்ந்தும் கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா எனக்கு தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இலங்கைக்கு வரும் சகல பிரஜைகளிடமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுமா? – அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா ? ” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “இலங்கைக்கு வரும் சகலரிடமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். தனியார் வைத்தியசாலை அல்லது அரசாங்கம் என ஏதோ ஒரு விதத்தில் பரிசோதனைக்கு உற்படுத்தப்படும் – “ என பதிலளித்தார்.

தொடர்ந்து கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா “ஆனால் இந்த சீனக் குழுவை தனிமைப்படுத்தவில்லை அப்படித்தானே?“ எனக்கேட்டார்.

தற்கு பதலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  “முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் கேள்விகளை முன்வைக்க  வேண்டாம், இவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை, ஒரு நாள் சந்திப்பிற்காக இவர்கள் வருகின்றனர். சீன கொமியுனிச கட்சியின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே இந்த குழுவுடன்  வருகின்றார். அவர்கள் எவ்வளவு பலமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியும், அவர்களை தனிமைப்படுத்தளுக்கு உற்படுத்துவது சரியானதா? என்ற கேள்வி உள்ளது’ என சமாளித்துக்கொண்டிருந்த வேளையில் இடையில் குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய  “ஹர்ஷ அவர்களே!  நான்தான் அவர்களை அழைத்துவர செல்கின்றேன். அவர்களை சந்திக்க எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அறிவுரையும் உள்ளது. நான் அவர்களை சந்தித்த பின்னர் பாராளுமன்றத்திற்கு வரும் வேளையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டே வருவேன்” என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *