இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தம் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் தாக்குதல் நடாத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்தார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்
“பல்கலைக்கழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்கு தண்டணை வழங்கப்படவேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
நாளை மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தவிர்ந்த பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.