ஐ.பி.எல் தொடரின் 22-வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் வார்னர் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய வார்னரும், பேர்ஸ்டோவ் ஜோடி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோவ் 97 ஓட்டங்களிலும், ரவி பிஷோனியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய போதிலும், ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை குவித்தது.
202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து தலைவர் கேஎல் ராகுல், சிம்ரன் சிங் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆவுட் ஆகினர். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரண், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து 37 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்த பூரண், ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார். ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 16.5 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 132 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இப்போட்டியில் 55 பந்தில் 97 ஓட்டங்களை குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது..இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.