“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ சிந்தனை தவறானதெனத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், இதன் மூலம் இராணுவத்தினர் மிகக் கூடுதலான அழுத்தங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கான யோசனை வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தையும் மேற்குலகிற்கெதிராக ஒன்று திரட்டியுள்ளதாக “கார்டியன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ் அச்சுறுத்தலுக்கு சட்டம் மற்றும் மனித உரிமைகளினூடாக பதிலளித்திருக்கவேண்டுமெனவும் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலுக்குப் பின்னரும் மிலிபாண்ட் இக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதத்திற்கெதிரான போரை வழிநடத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 5 தினங்கள் உள்ள நிலையில் மிலிபாண்டின் இவ் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. உலகளாவிய ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான போராட்டத்தை வரையறுக்கும் முகமாக பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சொற்பதத்தின் கீழான நடவடிக்கைகள் செப்டெம்பர் 11(9/11) இலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போதும் இதற்கான யோசனை தவறானதும் தவறாக வழிநடத்தப்பட்டதுமாகும்.
நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 2001 செப்டெம்பர் 20 இல் நடைபெற்ற காங்கிரஸின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே “பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற சொற்பதம் முதன் முதலாக ஜனாதிபதி புஷ்ஷினால் பயன்படுத்தப்பட்டது. மிலிபாண்ட் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் உலகின் அனைத்து குழுக்களையும் ஒசாமா பின்லேடன் மற்றும் அல்ஹைடா என்ற அமைப்பின் கீழ் உள்ளடக்கியுள்ளது.
ஆனால், வெவ்வேறுபட்ட நோக்கங்களைக் குழுக்கள் தனித்தனியாக அணுகப்பட வேண்டும். மிதவாதிகள் தீவிரவாதிகள், நல்லவைகள் கெட்டவைகள் என்ற வரையறைகளை இப்பதம் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டமை அவற்றில் ஒரு தவறாகும். பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் நன்மைகளையா தீமைகளையா அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தீர்மானிப்பார்கள்.
குவான்டனாமோ தடுப்புக் காவல் நிலையத்தை மூடும் பராக் ஒபாமாவின் உறுதிமொழிகள் வரவேற்கத்தக்கவை. ஒரே சொற்பதத்தின் கீழ் எதிரிகள் அனைவரும் நோக்கப்படுவதை வெவ்வேறுபட்ட அமைப்புக்கள் தமக்கு அனுகூலமாக எடுத்துக்கொண்டுள்ளன. பயங்கரவாதம் என்பது மரணத்தை விளைவிக்கும் ஒரு தந்திரோபாயம். இது ஒரு நிறுவனமோ அல்லது கொள்கைகளைக் கொண்டதோ அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்துவதை பிரிட்டிஷ் அரசாங்கம் பல வருடங்களுக்கு முன்னரே உத்தியோகப்பற்ற முறையில் கைவிட்டுள்ளதாகவும் மிலிபாண்ட் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.