“இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது ” – பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

“இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது ” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08.10.2020) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கைகளில் ஒன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையாகும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்த உடன்படிக்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் இந்த உடன்படிக்கையின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாக இருக்கிறது. தமிழ் மக்கள் இந்த உடன்படிக்கையின் ஒரு தரப்பாக தவிர்க்கப்பட்டதால் தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஒரு கடப்பாடு உள்ளது. ஆனால், உண்மை நிலவரமோ வேறு.

அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இலங்கை அரசோ அந்த உடன்படிக்கையையும், அதில் அடங்கிய சரத்துக்களையும் தான் அமுலாக்குவதாகக் கூறிக்கொண்டு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபைகள் சட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தபோது, அப்போதிருந்த முதன்மையான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோருடன் இச்சபையில் அங்கம் வகிக்கும் சம்பந்தனும் கையொப்பமிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

‘இந்திய நிபுணர்களின் பங்குபற்றுதலின்றி இந்தச் சட்டமூலம் வரையப்பட்டு நம் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சட்ட முன்வரைபை பகிரங்கப்படுவதற்கு முன் இந்திய அரசிடம் அதன் பிரதி சமர்ப்பிக்கப்படும் என்றே தமிழர் விடுதலைக்கு கூட்டணி எதிர்பார்த்திருந்தது. இவ்வாறு நடைபெறாது என நாம் கருதுவதால் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி ஜயவர்தனவை நாம் சந்தித்து இந்தியாவுக்குத் தெரியப்படுத்தாமலே இந்தச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் கவலையடைகின்றோம் எனத் தெரிவித்தோம்.

இது இந்தியாவை ஒரு தரப்பாக மதிக்காமல் நடத்துவதாக மாத்திரமன்றி, இந்த ஒப்பந்தத்தில் உள்ள பந்தி 2.15ஐ மீறுவதாகவும் அமைந்துள்ளது’ – அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அக்கடிதத்தின் முடிவில், ‘இக்காரணங்களுக்காக தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படாமல் , மேற்படி சட்டமூலங்களை இப்போதுள்ள வடிவத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஜயவர்தனவை வற்புறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்’ எனவும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

ஆகவே, இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இது ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்ற காரணத்தினாலேயே நாம் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம்.

தமிழ் மக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆளும்தரப்பினரும், ஐனாதிபதியும், பிரதமரும் நினைக்கலாம். ஆனால், அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. ஏனெனில், இந்திய – இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. அப்போதைய அரசு இந்திய – இலங்கை உடன்படிக்கையை தன்னிச்சையாக வியாக்கியானப்படுத்தியதன் விளைவே 13ஆவது திருத்தச் சட்டம்.

ஆகவே, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அந்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *