“ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப்படைகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீளப்பெறவுள்ளோம்” – டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் !

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா வேகமாக குறைத்து வருகிறது.
இதற்கிடையில், வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது அதிபர் டிரம்பின் கடந்த தேர்தல் அறிக்கையாக இருந்தது. அதன் பகுதியாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான வீரர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. தற்போது தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் ஜனாதிபதி டிரம்ப் இறங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் வரும்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) திரும்பப்பெற உள்ளோம்” என தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *