“மின்சார விநியோகம் தொடர்பான கடந்தகால செயற்பாடுகளுக்கு என்னால் பொறுப்புக்கூற முடியாது எனினும் எதிர்கால செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் என்னால் பொறுப்பு கூற முடியும்” என அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்திக்கு பெரும் செலவு ஏற்படுவதால் 2025 ஆம் ஆண்டுக்குள் தற்போது 32 வீதமாக உள்ள அத்தகைய உற்பத்தியை 05 வீதமாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2015 தொடக்கம் 2019 வரையான கால கட்டங்களில் மின்சார சபைக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து இலாபம் ஈட்டும் வகையில் மின்சார சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08.10.2020) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சமிந்த விஜேசிறி எம்.பி.எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் வரை 8 வீதமான மின்சாரம் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் இயற்கை எரிவாயு மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
நிலக்கரி கொள்வனவில் கடந்த காலங்களில் மோசடி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று முன்தினம் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கோப் குழு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் காலத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்காமையே மின்சார சபை நட்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
அதேவேளை மின் இணைப்புக்கான விநியோக பாதைகள் சுத்திகரிப்பு, மற்றும் மின்சார இணைப்பு வழங்குதல் இணைப்பை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் வெளியாரே நியமிக்கப்பட்டனர். மின்சார சபை அதற்காக பெரும் செலவை எதிர்நோக்கியது. அதனால் மின்சார சபை ஊழியர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்தகால செயற்பாடுகளுக்கு என்னால் பொறுப்புக்கூற முடியாது எனினும் எதிர்கால செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் என்னால் பொறுப்பு கூற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.