முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புலிகளின் மோட்டார் தளம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 24 ரக விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் 59வது படைப் பிரிவுகளுக்கு உதவியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்கு வைத்து நேற்றுக் காலை 10.55 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரணைமடு குளத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த மோட்டார் தளத்திலிருந்தே படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இந்தத் தாக்குதலில் அந்த தளம் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.