முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது, பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய சி.ஐ.டி.அதிகாரிகள், சுமார் ஒன்றரை மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி.அதிகாரிகள், விக்கினேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை ஒன்று தொடர்பாக நேற்று (10.10.2020) மாலை இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே குறித்த விசாரணைகள் இடம்பெற்றதாக விக்கினேஸ்வரன் தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
‘தமிழ் மக்களே இலங்கையின் மூத்த குடிகள்’ என்று வெளியிட்ட அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது. சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனபௌத்த பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றது என விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாகவே சி.ஐ.டி.அதிகாரிகளால் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எனினும் இவ்விடயத்தில் உறுதியாக இருப்பதாகவும் உண்மையான தகவல் ஒன்றைச் சொல்வதன் மூலம் இன நல்லுறவு பாதிக்கப்படும் என்றோ, சமாதானத்தை அது பங்கப்படுத்தும் என்றோ நினைக்கவில்லை என விசாரணையின்போது அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் ரீதியாக அல்லது வேறு காரணங்களுக்காக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. என்னிடம் கேள்வி கேட்கப்பட்டால் அதற்குப் பதிலளிப்பது அவசியம். அது எனது பொறுப்பு. அத்துடன் இவ்விடயம் தொடர்பாக எனக்கு ஓரளவு அறிவுள்ளது. அந்த அறிவை மக்களுடன் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன் என விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.
இவ்வாறு விக்கினேஸ்வரனிடம் பெறப்பட்ட சாட்சியம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, இறுதியில் அதில் அவரது கையொப்பமும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.