வன்னிப் போர் முனைத் தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் 31 சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன.
இந்த சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்களும் அடங்கியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை வவுனியா மாவட்ட நீதிவான் எம். ஜி. அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார். சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மேலும் 28 புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.