வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *