நாட்டில் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த அரசாங்கமாகவும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றி கொண்ட அரசாகவும் இன்றைய அரசாங்கம் வரலாற்றுப் பதிவை உறுதிசெய்யும் எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனி ஒருபோதும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். பயங்கரவாதத்துக்கு துணைபோகும் துரோகிகள் விடயத்தில் நாட்டு மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய, வடமேல் மாகாணங்களின் அரச வங்கி ஊழியர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; “ஒரு புறத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. மறுபுறத்தில் பகற்கொள்ளையரிடமிருந்தும் ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்தும் நாட்டை மீட்டெடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதேபோன்று கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை கிராமத்துக்குக் கொண்டு செல்லும் திட்டத்திலும் நாம் வெற்றிகண்டு வருகின்றோம். எமது படையினர் கிழக்கை வென்றெடுத்த பின்னர் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தூரப்பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கொங்கிரீட் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்தில் மாகாண மட்டத்திலான வீதி அபிவிருத்திக்கு 360 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளோம். மத்திய மாகாண அபிவிருத்திக்கு மட்டும் 900 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களில் 65 ஆயிரம் கோடி ரூபா நாட்டின் அபிவிருத்திக்குச் செலவிடப்பட்டுள்ளது. 661 பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்தச் செல வீனம் ட்ரிலியன் ரூபா தாண்டியுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த வண்ணமே நாட்டில் அபிவிருத்தியையும் துரிதப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் வரலாற்றைப் புரட்டும் போது இந்த அரசாங்கமே இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை வெற்றி கொண்டதாகப் பார்க்க முடியும். தேசத்தின் ஒற்றையாட்சியை பாதுகாத்து உறுதிசெய்த அரசு என்றும் பதியப்பட்டிருக்கும் முழுநாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்த அரசாகவும் அந்த வரலாற்றில் பதியப்பட்டிருக்கும்.
கடந்த காலங்களில் யுத்தத்தைக் காண்பித்து நாட்டின் அனைத்து அபிவிருத்திகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியில்லாவிட்டால் அபிவிருத்தி தடைப்பட்டது யுத்தம் காரணமாகவே என்று கூறிவந்தனர். ஆனால் நாங்கள் யுத்தத்தை வியாபாரமாக நடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளோம். யுத்தத்தை பிச்சைக்காரனின் புண்களாகக் காண்பிப்பதை இல்லாதொழித்து விட்டோம். எமது தாய்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுத்ததோடு, சமகாலத்தில் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுத்து வந்துள்ளோம். சம்பள அதிகரிப்புகளையும் செய்தோம். தெளிவானதொரு வேலைத்திட்டத்துடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டின் வளத்தில் ஒரு சிறுதுளியையேனும் எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க இடமளிக்கப்போவதில்லை. எமது தாய் நாட்டை நாம் பாதுகாத்தே ஆக வேண்டும். துண்டு துண்டாக உடைந்துபோன நாட்டில் நாம் வாழ முடியாது. நாடு ஒற்றையாட்சியின் கீழேயே இருக்க வேண்டும். அதனை தகர்ப்பதற்கு எந்தச் சக்திக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.
ஒன்றாகக் காணப்பட்ட ஒற்றையாட்சியின் கீழிருந்த நாட்டைச் சில சக்திகள் தங்களது சுயநலனுக்காக அரசியல் நோக்கங்களுக்காக கூறுபோட முயற்சித்தனர். அதற்கான முதற்கட்டப் பணிகளையும் செய்து முடித்திருந்தனர். அவர்களின் முயற்சியை இன்று நாம் தவிடுபொடியாக்கி விட்டோம். உயிருள்ளவரை நாம் எமது நாட்டைத் துண்டாட இடமளிக்கப் போவதில்லை. துண்டாடப்படப் போகும் தேசத்தைப் பாதுகாத்துத் தருமாறு எமது மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். ஆறு வருடங்களில் செய்து முடிக்குமாறு வழங்கிய ஆணையை நான் மூன்று வருடங்களில் செய்து முடித்துள்ளேன்.
அந்தப் பயங்கரவாதியின் மூச்சு முட்டுமளவுக்கு கழுத்து நெரிக்கப்பட்டு இப்போது இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சில சக்திகள் பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்க முற்பட்டு வருகின்றன. இந்த தீய சக்திகளை மக்கள் இனங்காண வேண்டும். அவர்களுக்குத் துணைபோகக்கூடாது. நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டே ஆக வேண்டும். மீண்டுமொரு தடவை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படக் கூடாது. மீண்டும் நாடு துண்டாடப்பட இடமளிக்க முடியாது. எனவே நீங்கள் உங்கள் மீதுள்ள கடப்பாட்டை நிறைவேற்ற முன்வரவேண்டும். நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்புடன் பணியை உறுதியுடன் முன்கொண்டு செல்ல வேண்டும். உங்கள் குறைபாடுகளை நிவர்த்திக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அவற்றை விரைவில் தீர்த்துத் தருகின்றேன். முதலில் நாட்டை மீட்டெடுத்துப் பாதுகாப்போம். அதன் பின்னர் எமது உரிமைகளைப் பற்றிப் பேசுவோம். வாழ்வதற்குத் நாடு வேண்டும். உரிமைப் போராட்டத்துக்கும் நாடு தேவை. இந்த உறுதிப்பாட்டுடன் செயற்படுமாறு உங்களனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.