“புதிய அரசை கொவிட்-20 தாக்கியுள்ளது. கொரோனாவைப் போல் அதற்கும் மருந்து இல்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று (14.10.2020)எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்திற்குள் 20 ஆவது திருத்தம் தொடர்பில் பெரும் குழப்பம் இடம்பெறுகிறது . நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருக்கின்ற அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கேவிந்து குமாரதுங்க போன்றோர் எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் அரசு இதற்கு முடிவு எடுக்காமல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கொவிட் 20 நோயாகும். கொரோனாக்கு எவ்வாறு மருந்து இல்லையோ அதே போல புதிய அரசியல் திட்டத்திற்கும் முடிவு இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.