விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி 3 வீரர்களுடன் பயணித்த ரஷ்ய விண்கலம், 3 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் பணியாற்றுவதற்காக வீரர்கள் சுழற்சி முறையில் பூமியில்இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைசிகோவ், செர்ஜி குட்-ஸ்வெர்கோவ், அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த கேத்லீன் ரூபின்ஸ் ஆகிய 3 வீரர்கள் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-17 விண்கலத்தில் இவர்கள் சென்றனர். இவர்களுடைய விண்கலம் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முன் சரக்குப் பொருட்களுடன் சென்ற விண்வெளி ஓடமே இந்த அதிவேகப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. வீரர்களுடன் செல்லும் விண்கலம் அதிவேகப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.