ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இவ்வாரம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இலங்கையில் மனித உரிமைகளின் தற்போதைய நிலைகுறித்தும் வன்னி மக்களின் இடப்பெயர்வு குறித்தும் கவனம் செலுத்தவுள்ளார். இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அகாஷி, நாளை புதன்கிழமை இரவு கொழும்பை வந்தடைவார். இவ்விஜயம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறைவடையும்.
அகாஷியின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட அம்மாகாண சபையின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரி.எம்.வி.பி. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) சந்திப்பாரா என உறுதியாகக் கூற முடியாதெனவும் தெரிவித்தனர்.
மேலும் அகாஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கும் இது பற்றி அறிவித்துள்ளதாகவும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அகாஷி இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார்.