முல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.
இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.
நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.