அரசின் அடக்குமுறைக்கு எதிரான தமிழ்தேசிய கட்சிகளின் கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை – அனந்தி சசிதரன் மற்றும் முன்னணியினர் வெளிநடப்பு !

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10.30மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் முதற்தடவையாக வந்திருந்தார். அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துவெளியேறியுள்ளார்.

குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியி’ருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏதோவொரு புள்ளியில் தமிழ்தேசிய தலைமைகள் ஒன்றிணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் தமிழர்களிடம் கொஞ்சமாவது எஞ்சி நிற்கின்ற நிலையில் – தமிழ்தலைமைகள் தங்களுக்கிடையிலேயே ஒற்றுமை உணர்வு இல்லாமலும் புரிதல் இல்லாமலும் பயணிக்கின்ற தன்மையானது, தமிழர் அரசியலின் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் உள்ள அரசை  எதிர்ப்பதற்கும் மிகப்பெரும் தடை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *