மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (17.10.2020) மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவை விசேட தர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்தே இன்று சமயவழிபாட்டின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில்,
“சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும்” என குறிப்பிட்டிருந்தார்.