அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thambi
    thambi

    புதிய சரித்திர நாயகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    Reply